முதல்வரின் வாழ்த்துச்செய்தி
தசாப்தங்கள் பல கடந்து எமது ப/ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரியிலிருந்து இணையத்தளம் ஒன்று உருவாகுவதையிட்டு. அதிபர் என்ற வகையில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
நூற்றி எழுபத்தைந்து வருட கால வரலாற்றினை கொண்ட எமது சமுதாயத்தின் வாழ்வின் பெருந்தோட்டத்துறையில் தேயிலை கன்றுகளை பாதுகாக்கும் நோக்கில் அந்நியர்களால் அமைக்கப்பட்ட ஒரு பள்ளிக் கூடமாக 1938 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று எழுபத்தைந்து வருட காலங்களை கடந்து வந்துள்ளது. அந்த வகையில் 1977 ம் ஆண்டு அரச பாடசாலையாக பொறுப்பேற்கப்பட்டு இன்று தேசிய பாடசாலையாக எமது பாடசாலை பிரகாசிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த வெற்றிப் பாதைக்கு பாடுப்பட்ட பெரியோர்கள், அதிபர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள்,நலன்விரும்பிகள், ஆகியோருடன் 2008 ம் ஆண்டு முதல் இப்பாடசாலையின் அதிபராக பதவியேற்று இன்று பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக எனது சேவைக் காலப்பகுதியில் பாடாசாலைக்கான இணையத்தளம் ஒன்று உருவாகுவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
எமது பாடசாலை தோட்டப் பாடசாலையாக தோட்ட நிருவாகத்தின் கீழ் நிருவகிக்கப்பட்டு, தொடர்ந்து அரசு பொறுப்பேற்றதன் பின், தமிழ் வித்தியாலயமாக இருந்து படிப்படியாக முன்னேற்றம் கண்டு தமிழ் மகா வித்தியாலயமாக, நவோதய பாடசாலையாக பரிணாமம் பெற்று இன்று தேசிய நீரோட்டத்தில் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 1000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இடை நிலைப்பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு இன்று தேசிய பாடசாலையாக வீறு நடை போடுகின்றமையையிட்டு மனம் புளகாங்கிதம் அடைகின்றேன்.
இணையத்தளத்தினை உருவாக்கும் பணியை முன்னின்று நடாத்தும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும். எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
திரு.S.கண்ணியமூர்த்தி
கல்லூரி முதல்வர்
ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரி